சனி, 6 ஜூன், 2015

துாது



காலை இளம்தென்றல்
கதிரவனைப் பார்த்து
காதல் செய்தது

தன் காதலை 
எடுத்துச் சொல்லி
காதலனை கண்டுவர
பனித்துளியை
துாது விட்டது
இளம்தென்றல்

செந்நிறம் மிக்கவனை
செக்கச் சிவந்தவனை
செம்மாதுளை
பழத்தோனின் அழகில்
மயங்கி பனித்துளியோ
கரைந்து விட்டது

எல்லையில்லா காதலை
கதிரவனுக்கு எடுத்துரைக்க
பரந்து விரிந்துள்ள
பெருங்கடலை 
துாது விட்டது
இளம்தென்றல்

நீராவியாய் உருமாறி
இளம்தென்றலின் 
காதல் ஜெயிக்க
துாது சென்றது
பெருங்கடல்

மேகத்தின் துணையோடு
தடுத்து நிறுத்தியதால்
அந்தரத்தில் தேங்கி
மழையாக பொழிந்தது
நீராவி

பூ மணத்தில் சிறந்திருக்கும்
தாழம் பூவை 
துாது விட்டது
இளம்தென்றல்

சிவனின் தலைமுடியை
காணாத போதிலும்
கண்டதாகக் கூறிய
தாழம் பூவை
அர்ச்சனையில்
வைப்பதில்லை யாரும்

அடுக்கடுக்கான 
முயற்சியில் தோல்விகண்ட
இளம்தென்றலை
நம் காதல் ஜெயிக்க
துாதுவிடுவது
எப்படி?

கதிரவனின் அழகில்
மயங்கிய பனித்துளியை
துாதுவிடுவது 
எப்படி?

கடலாய் பிறந்து
மழையாய் மாறிய
பெருங்கடலை
துாதுவிடுவது
எப்படி?

கடவுளிடமே
பொய்யுரைத்த
தாழம் பூவை
துாதுவிடுவது
எப்படி?

கண்ணே துாதுக்கு
ஏற்றார் யாருமில்லையென
என் காதலுக்கு
நானே வந்துவிட்டேன்
உன்னிடம் துாதாக..........

சனி, 30 மே, 2015

தவிப்பு





ஒன்றாய் கலந்த அன்பு
பிரிந்து, தவித்துக் கிடக்குமென்று
நான் நினைத்து பார்க்கலையே

குறுகிய காலத்திற்குள்
நமக்குள் பிரிவு வந்து
சேரும் என்று நான்
கனவேதும் காணலையே

மேகம் கருக்கலையே
மின்னல் வெட்டலையே
வானம் பிளந்ததுபோல்
மழையேதும் கொட்டலையே

புயல் வீசலையே
பூகம்பம் வரவில்லையே
கடல் பொங்கி எழவில்லையே

பிறகு ஏன் திசைக்கு
ஒன்றாக சிதறிப்போனது
உன்மேல் நான் வைத்த ஆசை

உறக்கத்தில் சலனமின்றி
எனக்குள் கேட்கிறது
நமக்குள் வேரறுந்த ஓசை

நுாலறுந்த காற்றாடியாய்
அலைந்து திரியுறேனே

திரிந்த பசும் பாலாய்
பயனற்று கிடக்குறேனே

என்னோடு நீயின்றி


வெள்ளி, 8 மே, 2015

என் மனதே நீ தானடி...




குழந்தை ஒலி கேட்டேன்
உன் குரலில்

கொஞ்சும் தமிழ் கேட்டேன்
உன் மொழியில்

நிலவை நான் நேரில்
பார்த்து வியந்தேன்
உன் வடிவில்

கள்ளம் கபடமற்ற
உன் அன்பில்
கலந்தேன்

உன்னில் ஏது ஒரு
காரணமுமின்றி
இணைத்துக் கொண்டேன்
என்னை

விண்ணைத் தொடும்
அளவிற்கு வியந்தேன்
உன்னழகில்

பேரன்பு கொண்டு
நேசித்ததைபோல் நீ
என்னில் கலந்தாய்

உனக்கும் எனக்குமான
இடைவெளியை உன்
அன்பில் அளந்தாய்

எனக்குள் கட்டுண்டு
கிடந்த காதலை
உன் இருவிழி கணையால்
பிளந்தாய்

கண்ணே, உனை கண்டதும்
காணாததைக் கண்டதைப்போன்று
சிறகடித்துப் பறந்தேன்
வானில்

என்னோடு நீ பேசிய
காதல் வார்த்தைகளை
எடுத்து ஊரவைத்தேன்
தேனில்

நீண்ட நெடுகாலம் ஆனதுபோல்
பழகி களித்தோம்

நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
என்பதைப் போல்
இணைந்து கிடந்தோம்
மனதால்

அன்பே, உன் வார்த்தை
கேளாது ஓர்நாளும் கழியாது

தினம் காதோரம் ரீங்காரமிடும்
சிம்பொனி இசையாய் உன் குரல்

தெகிட்டி விட்டதென்று
ஓர்நாளும் சொன்னதில்லை
என் காது

கண்ணே, என் மன வீட்டில் நீ
நுழையும் போது
வலது காலை எடுத்து
வைத்துதான்
வந்தாயா?

அப்படி என்றால் வந்தவழித்
தடம் மறைவதற்குள்
பிறகு ஏன் சென்றாய்?

துாங்கியது போதும்.....


போதும் துாங்கியது
எழுந்திடு இளைஞனே
காத்திருக்கு உனக்காக
எதிர்காலம் இளைஞனே...

கண்ணாடியாய்
காட்சிக்கு இரு
முன்னாடியாய்
ஆட்சிக்கு இரு....

தொண்டனாய் மக்களுக்கு இரு
தலைவனாய் நீதிக்கு இரு
கொடுமைகளை நீ கண்டு 
கொதித்தெழு எரிமலையாய்
மடமைகளை வீழ்த்தும்
வில்லாய் இரு....

கேள்விக்குறியாய் உள்ள 
மக்களை கூர்வாளாய் மாற்று
தினம் தினம் அவர்களுக்கு -நீ
எழுச்சி நீரை ஊற்று....

மண்டியிட்டு இருக்கும்
மக்களுக்கு மணி மகுடம் சூட்டு
நொண்டி மனங்களைக் கொண்ட
அவர்களுக்கு வீரப்பெயர்களைச் சூட்டு.....

சாதி, மதங்களில் பிரிந்திருக்கும் -மனித
சமுதாயத்தை ஒன்றிணை
எதிர்வரும் சந்ததிகள் 
சரிநிகர் சமானமாய் வாழ
நீ செய் கற்பனை.....

பிற்போக்கு சக்திகளின்
பின்னால் செல்லாமல்-நீ
முற்போக்கு உத்திகளை
முன்னெடுத்துச் செல்......

சரியும் பொய் மேடையில்
நின்று நீ முழக்கமிடாதே
எரியும் நெருப்புக்கு 
சுவாலையாய் இருக்க-நீ
மறந்து விடாதே......

வீரம் மிகுந்தவனாய்
இரு இளைஞனே-நெஞ்சில்
ஈரம் மிகுந்தவனாய்
இரு இளைஞனே......

உன் பின்னால் வருவதற்கு
உலகம் காத்திருக்கும்-உன்
ஓரக்கண்ணால் வழி நடத்திச் செல்
உனக்காக மலர்பாதை பூத்திருக்கும்.....

சனி, 2 மே, 2015

மரம்


காற்றை உள் வாங்கி
கை மாற்றி கொடுக்கும் 
கலை 
மரங்களுக்கு மட்டுமே 
தெரிந்த ரகசியம் .......



மின்னல்


வானம் 
வரைந்த 
ஓவியம்.....