காலை இளம்தென்றல்
கதிரவனைப் பார்த்து
காதல் செய்தது
தன் காதலை
எடுத்துச் சொல்லி
காதலனை கண்டுவர
பனித்துளியை
துாது விட்டது
இளம்தென்றல்
செந்நிறம் மிக்கவனை
செக்கச் சிவந்தவனை
செம்மாதுளை
பழத்தோனின் அழகில்
மயங்கி பனித்துளியோ
கரைந்து விட்டது
எல்லையில்லா காதலை
கதிரவனுக்கு எடுத்துரைக்க
பரந்து விரிந்துள்ள
பெருங்கடலை
துாது விட்டது
இளம்தென்றல்
நீராவியாய் உருமாறி
இளம்தென்றலின்
காதல் ஜெயிக்க
துாது சென்றது
பெருங்கடல்
மேகத்தின் துணையோடு
தடுத்து நிறுத்தியதால்
அந்தரத்தில் தேங்கி
மழையாக பொழிந்தது
நீராவி
பூ மணத்தில் சிறந்திருக்கும்
தாழம் பூவை
துாது விட்டது
இளம்தென்றல்
சிவனின் தலைமுடியை
காணாத போதிலும்
கண்டதாகக் கூறிய
தாழம் பூவை
அர்ச்சனையில்
வைப்பதில்லை யாரும்
அடுக்கடுக்கான
முயற்சியில் தோல்விகண்ட
இளம்தென்றலை
நம் காதல் ஜெயிக்க
துாதுவிடுவது
எப்படி?
கதிரவனின் அழகில்
மயங்கிய பனித்துளியை
துாதுவிடுவது
எப்படி?
கடலாய் பிறந்து
மழையாய் மாறிய
பெருங்கடலை
துாதுவிடுவது
எப்படி?
கடவுளிடமே
பொய்யுரைத்த
தாழம் பூவை
துாதுவிடுவது
எப்படி?
கண்ணே துாதுக்கு
ஏற்றார் யாருமில்லையென
என் காதலுக்கு
நானே வந்துவிட்டேன்
உன்னிடம் துாதாக..........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக