வெள்ளி, 8 மே, 2015

துாங்கியது போதும்.....


போதும் துாங்கியது
எழுந்திடு இளைஞனே
காத்திருக்கு உனக்காக
எதிர்காலம் இளைஞனே...

கண்ணாடியாய்
காட்சிக்கு இரு
முன்னாடியாய்
ஆட்சிக்கு இரு....

தொண்டனாய் மக்களுக்கு இரு
தலைவனாய் நீதிக்கு இரு
கொடுமைகளை நீ கண்டு 
கொதித்தெழு எரிமலையாய்
மடமைகளை வீழ்த்தும்
வில்லாய் இரு....

கேள்விக்குறியாய் உள்ள 
மக்களை கூர்வாளாய் மாற்று
தினம் தினம் அவர்களுக்கு -நீ
எழுச்சி நீரை ஊற்று....

மண்டியிட்டு இருக்கும்
மக்களுக்கு மணி மகுடம் சூட்டு
நொண்டி மனங்களைக் கொண்ட
அவர்களுக்கு வீரப்பெயர்களைச் சூட்டு.....

சாதி, மதங்களில் பிரிந்திருக்கும் -மனித
சமுதாயத்தை ஒன்றிணை
எதிர்வரும் சந்ததிகள் 
சரிநிகர் சமானமாய் வாழ
நீ செய் கற்பனை.....

பிற்போக்கு சக்திகளின்
பின்னால் செல்லாமல்-நீ
முற்போக்கு உத்திகளை
முன்னெடுத்துச் செல்......

சரியும் பொய் மேடையில்
நின்று நீ முழக்கமிடாதே
எரியும் நெருப்புக்கு 
சுவாலையாய் இருக்க-நீ
மறந்து விடாதே......

வீரம் மிகுந்தவனாய்
இரு இளைஞனே-நெஞ்சில்
ஈரம் மிகுந்தவனாய்
இரு இளைஞனே......

உன் பின்னால் வருவதற்கு
உலகம் காத்திருக்கும்-உன்
ஓரக்கண்ணால் வழி நடத்திச் செல்
உனக்காக மலர்பாதை பூத்திருக்கும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக