சனி, 28 நவம்பர், 2020

ஊரடங்கு



பெரும் புயலுக்குப்பிறகான

நாட்களில் வரும் 

அமைதியைப் போல

நீண்ட நிசப்தமாய்

முடங்கிக் கிடக்கிறது

வாழ்க்கை...


இயல்பான வாழ்க்கையில்

இயற்கை மட்டுமே

இயங்குகின்றன

இரும்புக் கதவுகளுக்குள்-தன்னை

சிறைவைத்துக்கொள்ளாமல்...


ஆள் நடமாட்டமின்றி

வெறிச்சோடி கிடக்கின்றன

எப்போதும் இயங்கிவந்த

சாலைகள்

புழுதி கிளப்பாமல்

ஒற்றை புன்னகையுடன்...


கோயில்களும்

தேவாலயங்களும்

மசூதிகளும்

மவுனித்துகிடக்கின்றன

அர்ச்சனைகள், பிரார்த்தனைகள்,

தொழுகைகள் இன்றி...


அத்தியாவசியப் பொருட்களுக்காக

வெளியில் செல்லும்போது

பதுங்கி பதுங்கி

செல்கிறார்கள் மக்கள்

ஒரு பூனையைப் போல...


யாரைப் பார்த்தாலும்

மிரளுகிறது 

அருகில் செல்லவோ

தொட்டுப்பேசவோ

கூடவில்லை மனம்...


கொரோனாவால் வந்த

ஊரடங்கிற்குப் பிறகான

நாட்களிலும் இதேநிலை

நீளுமோ என்ற அச்சத்தில்

நகர்கிறது வாழ்க்கை...


-துரிஞ்சை இரமேஷ்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக